தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியா,எம்பெக் சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை நேற்றையதினம் புதன்கிழமை (25) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர், கட்சியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு, இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான நிலைமைகள் மற்றும் நல்லாட்சி நடவடிக்கைகள், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதேவேளை இச்சந்திப்பின்போது கல்முனைத் தொகுதியில் கிட்டங்கி பாலம் தொடக்கம் சாய்ந்தமருது தோனா வரை வடிகாலமைப்பு அபிவிருத்திக்கு தென் ஆபிரிக்கா உதவ முன்வர வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் முன்வைத்த வேண்டுகோள் அந்நாட்டு வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பில் தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சருடன் இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் உள்ளிட்ட ராஜதந்திரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்(தொகுப்பு :-http://www.battifm.com/).